
சென்னை சைதாப்பேட்டையில் கௌதம்-பிரியா தம்பதியினர் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் வீட்டிற்கு நேற்று முன்தினம் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்து கத்தி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களால் கௌதமை கொடூரமாக கொலை செய்தனர். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கௌதம் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிரியாவின் முன்னாள் கணவரான ராஜ்கிரண் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கௌதமை கொலை செய்தது தெரியவந்தது.
அதாவது கடந்த சில வருடங்களுக்கு முன்பாக பிரியா மற்றும் கௌதம் இருவரும் காதலித்து வந்த நிலையில் இந்த விவகாரம் பிரியா வீட்டுக்கு தெரிய வரவே அவர்கள் ராஜ்கிரனுடன் கடந்த 6 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். இந்த தம்பதிகளுக்கு இரு குழந்தைகள் பிறந்த நிலையில் பிரியா மற்றும் கௌதம் தங்களுடைய காதலை மறக்காததால் கணவரை பிரிந்து பிரியா கௌதமுடன் தன் குழந்தைகளுடன் வாழ ஆரம்பித்தார்.
இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத ராஜ்கிரன் அவர்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ராஜ்கிரனை பிரியா மற்றும் கௌதம் இருவரும் அரிவாளால் வெட்டினர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பிரியா மற்றும் கௌதம் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் பின் இருவரும் சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் குழந்தைகளுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர். இந்த நிலையில் தான் ராஜ்கிரன் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கௌதமை கொலை செய்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் பிரதீப், சுரேஷ், ராஜா ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்த நிலையில் தலைமறைமாக உள்ள ராஜ்கிரண், சுகுமார் மற்றும் மணி ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.