மத்தியப் பிரதேச மாநிலத்தின் டாமோ மாவட்டத்தில் உள்ள ஹடா காவல் நிலைய எல்லையில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது சன்வாஹா கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ராஜேஷ் திரிபாதி (வயது 47), ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளையர்கள் தாக்கியதன் மூலம் உயிரிழந்தார். இந்த  சம்பவத்தின் போது ராஜேஷ் ஹட்டாவில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டு, ரூ. 4 லட்சம் பணத்துடன் தனது பைக்கில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். இவர் ஹடா மக்ரோன் சாலையில் உள்ள சுங்கச்சாவடியை கடந்ததும், ஹார்ட் மற்றும் பரோடா கிராமங்களுக்கு இடையில் உள்ள பகுதியில் நான்கு அடையாளம் தெரியாத நபர்கள் அவரை மறித்தனர்.

அவர்கள் ராஜேஷை முதலில் கொடூரமாக தாக்கி, பணத்தை அபகரித்தனர். பின்னர், அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டனர். தீக்காயமடைந்த நிலையில் ராஜேஷ், தனது சகோதரர் முகேஷ் திரிபாதியை செல்போன் மூலம் அழைத்து முழு சம்பவத்தையும் கூறியுள்ளார். ஆனால் பின்னர் அவரது தொலைபேசி செயலிழந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த குடும்பத்தினர், ராஜேஷை முதலில் ஹடா மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் டாமோ மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டபோதும், வழியிலேயே உயிரிழந்தார் என மருத்துவர் சுரேந்திர விக்ரம் சிங் உறுதிப்படுத்தினார்.

போலீசார் சம்பவ இடத்திலிருந்து அவரது பைக் மற்றும் ஒரு பையை மீட்டுள்ளனர். இது, கொள்ளைக்கு பிறகு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட கொலை என ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஹடா மற்றும் டாமோ போலீசார் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்திற்கு பின், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ராஜேஷின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவரது கிராமத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக SDPO பதரியா ரகு கேசரி தெரிவித்துள்ளார்.