
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இன்று பௌர்ணமி நாளையொட்டி பெருமளவில் பக்தர்கள் வருகை தந்தனர். வழக்கம்போல பக்தர்கள் கடலில் குளித்து ஆனந்தமடைவதற்காக கடலுக்கு சென்ற நிலையில், அப்போது திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டது. இந்த திடீர் அலைகளால் பலரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.
கோவிலுக்கு திருப்பூர் மாவட்டம் தெருமாநல்லூரைச் சேர்ந்த சுதாகர் என்பவருடன் வந்த அவரது மனைவி மீனாட்சி (36), கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, கடலின் சீற்றம் காரணமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனால் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, ரத்தம் அதிகமாக வெளியேறியது.
மேலும் பெரிய அலையில் சிக்கி கடலுக்குள் இழுக்கப்பட்டதால் அதிர்ச்சி நிலவியது. அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள், தன்னார்வலர்கள், பெண் போலீசார் உடனடியாக கடலில் இறங்கி அவரை மீட்டு, இலவச ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுபோன்று மேலும் மூன்று பக்தர்களும் கடலின் சீற்றத்தால் காயமடைந்ததாகவும், அவர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கோவில் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் கடலில் அலைகள் அதிகமாகும் என்பதும் இயல்பேதான் என்றாலும், ஒரே நாளில் நால்வருக்குக் காயம் ஏற்படுவது கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பக்தர்கள் கடலில் நீராடும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல் வழங்கினர்.