கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன். இந்த கட்சி திமுக கூட்டணியில் இருக்கும் நிலையில் கடந்த சட்டசபை தேர்தலில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு ஈஸ்வரன் எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். சமீபத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருப்பதால் அதிமுகவை விட்டு விலக இருப்பதாக செய்திகள் பரவியது. அப்போது ஈஸ்வரன் செங்கோட்டையனின் விசுவாசத்தை யாரிடமும் ஒப்பிட முடியாது அவர் கண்டிப்பாக அதிமுகவிலிருந்து விலக மாட்டார் என்று கூறினார். இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஈஸ்வரன் எடப்பாடி பழனிச்சாமிக்கு புகழாரம் சூட்டியது பரபரப்பாக பேசப்படுகிறது. இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 4 வருடமாக அதிமுக ஆட்சியில் இருந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி நல்லாட்சியை கொடுத்தார். தற்போது அதிமுக மீண்டும் இணைய வேண்டும் என்று கூறுகிறார்கள்.

ஆனால் டிடிவி தினகரன், சசிகலா மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் கட்சி இணைய வேண்டும் என்றுதான் கூறுகிறார்களே தவிர எடப்பாடி பழனிச்சாமியை நாங்கள் பொதுச் செயலாளராக ஏற்றுக்கொண்டு கட்சிக்குள் வருகிறோம் என்று சொல்லவில்லை. அவர்களின் நோக்கம் கட்சிக்குள் வந்து எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவது மட்டும்தான். தற்போது உள்ள சூழ்நிலையில் அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமியால் தான் வழிநடத்தி செல்ல முடியும். அவருக்கு ஏராளமான நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் ஆதரவு கொடுக்கிறார்கள் என்று கூறினார். மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று இபிஎஸ் கூறி வரும் நிலையில் தற்போது திமுக கூட்டணியில் இருக்கும் ஈஸ்வரன் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக பேசியதால் கூட்டணிக்குள் விரிசலா என்று பரபரப்பாக பேசப்படுகிறது.