மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் முருகேசன் (54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திமுக கட்சியின் நிர்வாகி. இவருக்கு ராஜசேகர் (33) என்ற நண்பர் இருக்கிறார். இதில் முருகேசனின் மகன் மணி (27). இவர் தன்னுடைய பைக்கின் சான்றிதழ்களை ராஜசேகரிடம் அடமானமாக வைத்து ரூ. 27,000 கடன் பெற்றுள்ளார்.

இந்த பணத்தை அவருக்கு மீண்டும் திருப்பி கொடுத்த நிலையில் ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதில் இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி ராஜசேகர் தன்னுடைய நண்பர் பென்னி பார்த்திபன் என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு தன்னுடைய நண்பர்களான சரவணன், பூமர் சரவணன் ஆகியோர்களுடன் மணி வந்துள்ளார்.

அவர்கள் அனைவரும் சேர்ந்து ராஜசேகர் மற்றும் பொன்னி பார்த்திபனை கடுமையாக தாக்கியுள்ளனர். இது தொடர்பான வழக்கு டி கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் நடைபெறுகிறது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக கோபம் அடைந்த ராஜசேகர் மற்றும் பார்த்திபன் இருவரும் சேர்ந்து முருகேசனை கழுத்தறுத்து கொலை செய்தனர்.

அவர்கள் கொலை செய்துவிட்டு முருகேசன் உடலை சுடுகாட்டில் போட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ராஜசேகர் மற்றும் பார்த்திபன் ஆகியோரை நேற்று கைது செய்தனர். திமுக கட்சி நிர்வாகி ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.