சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் அஜித்குமார் என்ற வாலிபர் நகை திருட்டு சந்தேகத்தின் பெயரில் அழைத்துச் சொல்லப்பட்டு போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அஜித்குமாரை அடித்த 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை சஸ்பெண்ட் செய்து கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இந்த சம்பவத்திற்கு ஸ்டாலின் அரசுதான் காரணம் எனக் குற்றம் சாட்டி வருகிறார். இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி ஒரு கண்டன பதிவை தற்போது வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,

முதல்வர் ஸ்டாலினின் தொலைபேசி உரையாடல்- அலட்சியத்தின் உச்சம்!

கொலை செய்தது உங்கள் அரசு.

“SORRY” என்பது தான் உங்கள் பதிலா?

அஜித்குமார் இருந்ததால் தான் அந்த குடும்பம் தைரியமாக இருந்தது.

அவர்கள் தைரியத்தை கொலை செய்துவிட்டு, “தைரியமாக இருங்கள்” என்று சொல்வதற்கு என்ன தைரியம் இருக்க வேண்டும் இந்த பொம்மை முதல்வருக்கு?

முதல்வரின் பேச்சில் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லையே?

“என்ன பண்ணணுமோ பண்ணி கொடுக்க சொல்றேன்” என்று சொல்கிறீர்களே… போன அப்பாவி அஜித்குமாரின் உயிரை திருப்பி கொடுக்க முடியுமா ?

வேறென்ன செய்துவிடப் போகிறீர்கள்? கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் போது, உறவினர்களை அஞ்சலி செலுத்தக் கூட விடாமல், காசைக் கொடுத்து அவர்களின் குரலை ஒடுக்கலாம் என்று முயன்றீர்களே.. அதை போன்ற முயற்சிதானே இதுவும்?

அஜித்குமார் இறந்து நான்கு நாட்கள் கழித்து, எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ,அதன் அடிப்படையில் நீதிமன்றம் விசாரித்து , கடுமையான விமர்சனங்களை வைத்த பிறகு FIR, கைது எல்லாம் நடக்கிறது.

உங்கள் ஆசை வார்த்தைக்கு தமிழ்நாட்டு மக்கள் இதுவரை ஏமாந்தது போதாதா? அஜித்குமார் குடும்பமும் ஏமாற வேண்டுமா?

“நடக்கக் கூடாதது நடந்துடுச்சு” என்று சொல்ல நா கூசாவில்லையா உங்களுக்கு? இது என்ன முதல் முறை உங்கள் ஆட்சியில் நடந்திருக்கிறதா? இது 25-வது முறை!

இந்த அரசு எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கும் என்பதற்கு இந்த அலட்சிய போட்டோஷூட்

போன் காலே சாட்சி! என்று பதிவிட்டுள்ளார்.