இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, அனைவருக்கும் வணக்கம் இன்று சர்வதேச மகளிர் தினம். இதனால் தமிழகம் முழுவதும் இருக்கும் என்னுடைய அம்மா, அக்கா, தங்கை மற்றும் தோழி என உங்கள் அனைவருக்கும் இந்த தினத்தில் வாழ்த்து சொல்லாமல் இருக்க முடியாது. இது சந்தோஷம் தானே.எந்த பாதுகாப்பும் இல்லாத போது எப்படி சந்தோஷமாக இருக்க முடியும் என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது.

நீங்க நாங்க நாம எல்லோரும் சேர்ந்து தான் இந்த திமுக அரசை தேர்வு செய்தோம். அவர்கள் நம்மை ஏமாற்றி விட்டார்கள் என்பது இப்போதுதானே தெரிகிறது. ஆனால் மாற்றம் என்பது இருக்கிறதுதானே. எனவே 2026 ஆம் ஆண்டு தேர்தலில் நாம எல்லோரும் சேர்ந்து இந்த திமுக அரசை மாற்றுவோம். மகளிர் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று இந்த தினத்தில் உறுதி ஏற்போம் என்று கூறியுள்ளார். மேலும் திமுக பெயரை சொல்லாமலேயே நடிகர் விஜய் விமர்சனம் செய்வதாக சர்ச்சை எழுந்த நிலையில் இன்று திமுகவின் பெயரைச் சொல்லி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.