தமிழக சட்டசபை முதல் நாள் கூட்டத்தொடரின் போது ஆளுநர் ரவி திமுக அரசு எழுதிக் கொடுத்த உரையை படிப்பதற்கு முன்பாகவே தேசிய கீதத்தை அவமதித்துவிட்டதாக கருதி சபையை விட்டு வெளியேறிவிட்டார். இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் சீமானும் கண்டனம் தெரிவித்தார். அதாவது ஆளுநர் மரபை காக்க வேண்டும் எனவும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட பிறகுதான் தேசிய கீதம் பாடப்படும் எனவும் இதனை ஆளுநர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறினார். அதோடு சட்ட சபையை விட்டு வெளியேறியதற்கு பதிலாக தமிழ்நாட்டை விட்டே ஆளுநர் வெளியேறிவிடலாம் என்று கூறினார்.

இந்நிலையில் சட்டசபையை விட்டு ஆளுநர் வெளியேறியதற்கு இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் மற்றொரு காரணம் கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப்பொருள் புழக்கம் என பல அவலங்கள் நிகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக ஆட்சியாளர்கள் எழுதிக் கொடுத்த பொய்யை படிக்க வேண்டுமா என நினைத்ததால் ஆளுநர் சட்டசபையை விட்டு வெளியேறிவிட்டார். ஒருவேளை அரசு எழுதிக் கொடுத்த உரையை ஆளுநர் படித்திருந்தால் அவர் திமுகவில் சேர்ந்து விடலாம் என்று நாங்கள் நினைத்திருப்போம். மேலும் இதன் காரணமாகத்தான் ஆளுநர் சட்டசபையை விட்டு வெளியேறினார் என்று கூறினார்.