
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் ஆணையத்தில் பொதுச்சின்னம் கேட்டு விண்ணப்பிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியினை தொடங்கிய நிலையில் அடுத்து வரும் தேர்தலில் போட்டியிட இருக்கிறார். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருப்பதால் 6 மாதங்களுக்கு முன்பாகவே தேர்தல் சின்னத்திற்கு தேர்தல் ஆணையத்தில் முறையாக பதிவு செய்வது அவசியம்.
அதன்படி வருகிற டிசம்பர் மாதம் தேர்தல் சின்னத்திற்காக இந்திய தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் பதிவு செய்ய உள்ளாராம். இதற்காக தற்போதே எந்த சின்னத்தை தேர்வு செய்யும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவுக்கு இரட்டை இலை, திமுகவுக்கு உதயசூரியன் என பிரத்தியேக சின்னங்கள் இருக்கும் நிலையில் இதே போன்று ஒரு பிரத்தியேக சின்னத்தை தேர்வு செய்து தேர்தலுக்கு முன்பாகவே அதனை மக்கள் மத்தியில் பிரகடனப்படுத்தி பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் வேட்டைக்காரன் படத்தில் ஆட்டோவில் வருவதால் ஆட்டோ சின்னத்தை தேர்வு செய்ய இருப்பதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இருப்பினும் அந்த கட்சியின் நிர்வாகிகள் எங்கள் தலைவர் எந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதை ஏற்கனவே முடிவு செய்து வைத்திருப்பார். அதைப் பற்றி உரிய நேரத்தில் அவரே முறையாக அறிவிப்பார் என்கிறார்கள். மேலும் அடுத்து வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நடிகர் விஜய் கட்சி போட்டியிடும் நிலையில் தற்போது தேர்தல் சின்னம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.