விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் வன்னியரசு இஸ்லாமியர்களிடமிருந்து அச்சுறுத்தல் வருவதாக விஜய் கூறியதால் தான் மத்திய அரசு ஒய்ப்பிரிவு பாதுகாப்பு கொடுத்துள்ளதாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கொடுத்த நேர்காணலின் போது கூறினார். இது சர்ச்சையாக மாறி உள்ள நிலையில் அவருக்கு தமிழக வெற்றி கழகத்தினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி லயோலா மணி ஒரு பேட்டியில் வன்னியரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, இஸ்லாமியர்களிடமிருந்து ஆபத்து வருவதாக எங்கள் தலைவர் கூறியதால் தான் மத்திய அரசு பாதுகாப்பு கொடுத்ததாக வன்னியரசு கூறியுள்ளார். இது எவ்வளவு பெரிய அபத்தமான ஆபத்தான கேவலமான பேச்சு. நீங்க யார் சொல்லி இப்படி பேசுறீங்க.

எனக்கு முதலில் வன்னியரசு அண்ணன் மீது மதிப்பு மரியாதை இருந்தது. இப்ப நான் ஏன் அவருக்கு மரியாதை கொடுக்கணும். அவர் சொன்னதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா. அவ்வளவு பெரிய ஊடகத்தில் உட்கார்ந்து இப்படி பேசுவதற்கு உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார். அண்ணன் திருமா அவர்கள் அப்படி உங்களை பேச சொன்னார்களா. அவர் அப்படி சொல்லக்கூடிய ஆளும் கிடையாது பேசக்கூடிய ஆளும் கிடையாது. திருமா நாகரிகமான முறையில் பேசக்கூடிய ஆள் என்பதால் நீங்கள் யார் சொல்லி அப்படி பேசினீர்கள் என்பதை சொல்ல வேண்டும். நீங்க விசிகவின் பொது செயலாளர் ஆக இருக்கிறீர்களா அல்லது திமுகவின் செய்தி தொடர்பாளராக இருக்கிறீர்களா. அவர் பேசுவதை பார்த்தால் இங்கே இருக்கக்கூடிய இஸ்லாமியர்களிடையே மத கலவரத்தையும் வன்முறையையும் ஏற்படுத்த நினைப்பது போல் தெரிகிறது.

எங்கள் கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக ஒரு இஸ்லாமிய பெண்மணி இருக்கும் நிலையில் எங்கள் கட்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள். நாங்கள் எல்லோரும் சகோதரத்துவத்துடன் எங்கள் கட்சியில் பழகும் நிலையில் இஸ்லாமியர்களிடமிருந்து பாதுகாக்க தான் எங்கள் தலைவர் பாதுகாப்பு கேட்டதாக சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். இது கேவலமாக இல்லையா இதைத்தான் நாங்கள் பாசிசம் பாயாசம் என்கிறோம். அற்ப அரசியலுக்காக இப்படி இழிவாக பேசுகிறார்கள். உங்களால் நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு சீட்டுகளுக்கு மேல் வாங்க முடியுமா.? விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக 6 சீட்டுகளுக்கு மேல் கொடுக்க முடியாது என்கிறார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் இல்லாவிடில் திமுகவால் ஜெயிக்க முடியுமா. அப்படி இருக்கும்போது உங்களுக்கு ஆறு சீட்டுக்கு மேல் தர முடியாது என்று அவர்கள் சொல்கிறார்கள். அப்படி இருக்கும்போது நீங்கள் ஏன் அடிமையாக கொத்தடிமையாக அண்ணா அறிவாலயத்திற்குள் கிடக்கிறீர்கள் என்று நாங்கள் கேட்கும் போது உங்களுக்கு எப்படி எவ்வளவு காயம் ஏற்படுகிறது. நீங்கள் அவ்வளவு பெரிய ஊடகத்திலிருந்து இப்படி ஒரு பொய்யை சொன்னது தவறு. மேலும் யாரோ ஒருவரை சந்தோஷப்படுத்துவதற்காக நீங்கள் எங்களை தரம் தாழ்ந்து பேசினீர்கள் என்றால் அதைவிட கேவலமாக நாங்கள் பேசுவோம் என்று கூறினார்.