உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவ்கர் கிராமத்தில், குடிநீர் அமைப்பை ஆய்வு செய்ய சென்ற அதிகாரிகள் மீது திடீரென தேனீக்கள் கொட்டிய பரபரப்பு சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

இந்த தாக்குதலில் 7 அரசு அதிகாரிகள் படுகாயமடைந்தனர். அவர்களில் துணை மாவட்ட ஆட்சியாளர் (ADM) ராஜேஷ் ஸ்ரீவாஸ்தவ் மீது மட்டும் சுமார் 500 தேனீக்கள் கடித்ததாக கூறப்படுகிறது. அவரை ஆபத்தான நிலையில் ஜான்சி மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர்.

அவருடன் பணியில் இருந்த மாவட்ட வளர்ச்சி அலுவலர் கமல்காந்த், உயிரைக் காப்பாற்ற முகத்தை மறைத்து கொண்டு ஓட முயன்றார். மேலும் நயாப் தேசில்தார் ஃகனேந்திர திவாரி, துணை இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார், இரண்டு லெக்பால்கள் மற்றும் ஒரு காவலருக்கு பலத்த தேனீ கடிகளால் காயங்கள் ஏற்பட்டன.

அதே நேரத்தில், சிறப்பு செயலாளர் சுனில் குமார் வர்மா சம்பவ இடத்திலிருந்து ஓடிப்போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அக்கிராம மக்கள் போர்வைகள் கொண்டு வந்து அதிகாரிகளை காப்பாற்ற முயற்சித்தனர்.

பின்னர், தகவலறிந்த போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து தேனீக்களை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சம்பவத்திற்கு பின்னர் மாவட்ட ஆட்சியர் அக்ஷய் திரிபாதி ஜான்சி மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த அதிகாரிகளை நேரில் சந்தித்து, அவர்களின் உடல் நலத்தை பார்வையிட்டார். இந்த தாக்குதல் சம்பவம் அதிகாரி மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.