
குருக்ராமில் வசிக்கும் மாயங்க் அகர்வால் என்ற நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி, சமீபத்தில் தனது லிங்க்ட்இன் பக்கத்தில் பகிர்ந்த ஒரு அனுபவம், பலரையும் உணர்ச்சிவசப்பட செய்துள்ளது. அவர் ஒரு ஸ்விகி டெலிவரி ஊழியர் பங்கஜ் என்பவர் தன் 2 வயதான மகள் டுன்டுனுடன் டெலிவரி செய்கிறார். “முதலில் அவரை மேலே வரச்சொன்னேன்… ஆனால் பின்னணியில் குழந்தையின் குரல் கேட்டதும் கீழே சென்று பார்த்தேன். பைக்கில் தனது சிறுமியுடன் வந்திருந்தார் பங்கஜ். தாயை பிறப்பில் இழந்த குழந்தை, பெரிய சகோதரன் வேறு நேரத்தில் வகுப்புக்குச் செல்கிறார். இவரால் வீட்டில் யாரும் கவனிக்க முடியாத நிலை!” என மாயங்க் எழுதியிருந்தார்.
பங்கஜின் அமைதியான புன்னகையும், கடமையைத் தவறாமல் செய்வதிலிருந்தும், வாழ்க்கையை எதிர்நோக்கி எப்படி போராடுகிறார் என்பதைக் காணலாம். சில வாடிக்கையாளர்கள் “குழந்தையை கவனிக்க முடியவில்லை என்றால் வீட்டிலேயே இருங்கள்” என்று கூறியதையும் அவர் அமைதியாக தாங்கியுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாக, பலரும் இணக்கமும், மனிதாபிமானமும் தேவை என கருத்து தெரிவித்து வருகிறார்கள். “இதுபோல் பல பெண்கள் ஆண்டாண்டாகச் செய்கிறார்கள், ஆனால் யாரும் போஸ்ட் போடுவதில்லை. இந்த தந்தைக்கும், அதைவிட அதிகமாக அந்த பெண்களுக்கும் வாழ்த்துகள்,” என ஒருவர் குறிப்பிட்டார். இன்னொருவர், “நம்மை விட உயர்ந்தவர்கள் இவர்கள் தான் – ஆனால் நாம்தான் மரியாதை தர மறுக்கிறோம்” என்றார். ஸ்விகி நிறுவனம் இதுபற்றி பதில் அளிக்குமா என பலரும் எதிர்பார்க்கிறார்கள்.