தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டில் உள்ள விசாலை என்ற இடத்தில் 80 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெறும் நிலையில் மாநாட்டுக்கு வருபவர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக 207 ஏக்கர் நிலமும் ஒப்பந்த அடிப்படையில் பெறப்பட்டுள்ளது. இந்த மாநாடு நடைபெறும் இடத்தில் கிழக்கு திசை நோக்கி பிரம்மாண்ட மேடை அமைக்கப்படுகிறது. அதன் பிறகு மாநாட்டுக்கு விஜய் வரும் வகையில் அவருக்கென தனி வழி பாதை அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வரும் அவர் மேடையில் ஏறி வரும்போது தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை பார்த்து கையத்தவாறு வருவதற்காக சுமார் 800 மீட்டர் நீளம் மற்றும் 12 அடி உயரத்தில் ரேம்ப்வாக் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டுக்குள் வருவதற்கு 5 வழிகளும் வெளியே செல்வதற்கு 15 வழிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த இடத்தை சுற்றிலும் 600-க்கும் மேற்பட்ட கொடி கம்பம் நடப்பட்டு கொடி பறக்க விடப்பட்டுள்ளது.

இந்த மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றிலும் 700-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு காமராஜர், அம்பேத்கர், பெரியார், வேலு நாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோர்களின் பெரிய கட்டவுட் வைக்கப்பட்டுள்ள நிலையில் கட்சி கொடியில் இடம் பெற்றுள்ள சின்னங்கள் மிகப்பெரிய நுழைவு வாயிலாக பிரம்மாண்டமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாநாட்டை முன்னிட்டு நடிகர் விஜய் தன்னுடைய கட்சி கொள்கைகள் போன்றவற்றை அறிவிப்பார் என்பதால் அவருடைய தொண்டர்கள், ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளும் அவருடைய மாநாட்டை உற்றுநோக்கி கவனித்து வருகிறது.