
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது என்னை அழைத்தாலும், அழைக்காவிடிலும் கண்டிப்பாக தவெக முதல் மாநாட்டில் கலந்து கொள்வேன். அதாவது விஜயின் கொள்கை மற்றும் அவர் மக்களுக்கு என்ன சொல்ல போகிறார் என்பதை தெரிந்து கொள்வதற்காகவே நிச்சயம் நான் ஒரு வாக்காளர் என்ற முறையில் தவெக மாநாட்டில் கலந்து கொள்வேன்.
நான் இன்னும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது குறித்து முடிவு எடுக்கவில்லை. இருப்பினும் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் நான் ஒரு வேட்பாளராக இருக்க கூட வாய்ப்புள்ளது என்று கூறினார். முன்னதாக நடிகர் விஷால் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. வருகிற 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை என்ற இடத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு என்பது நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு இலட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் நிலையில் கண்டிப்பாக மாநாட்டில் கூட்டம் அலைமோதும் என்பதில் ஐயமில்லை. நடிகர் விஜய் புதிதாக அரசியலுக்கு வந்துள்ள நிலையில் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் கண்டிப்பாக தமிழக அரசியல் வட்டாரத்தில் அவருடைய வருகை ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தலாம் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. அதோடு தமிழக வெற்றி கழகத்தில் சினிமா பிரபலங்கள் கூட இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் புதிதாக கட்சி தொடங்குவேன் என்று கூறிய விஷாலே தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய வாய்ப்புள்ளதாக வெளிவந்த தகவல் சினிமா வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்திலும் பேசும் பொருளாக மாறி உள்ளது.