தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் இன்று மாணவ மாணவிகளை சந்தித்து பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கிய நிலையில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் முடிவுக்கு ஆதரவு கொடுப்பதாக கூறினார். அதாவது நீட் தேர்வு முறை கேட்டினால் அதன் மீதுள்ள நம்பிக்கை மக்கள் மத்தியில் போய்விட்டது எனவும், மாநில கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கு தேசிய முறையில் தேர்வு எழுத வேண்டும் என்பது அநீதி எனவும் கூறினார்.

அதோடு தமிழக அரசு கொண்டு வந்த நீட் விலக்கு மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். அதோடு தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து ஒன்றிய அரசு விரைவில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது, நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவை இல்லை என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. இதை வலியுறுத்திய நடிகர் விஜயின் கருத்துக்கு ஆதரவு கொடுக்கிறோம் என்று கூறியுள்ளார்.