தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் பெண்களுக்கு மரியாதையே இல்லை என்று கூறி தற்போது மகளிர் அணி கூண்டோடு விலகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர் ஒன்றியத்தில் காரைக்குடி காலனி உள்ளது. இங்கு பிரியதர்ஷினி என்பவர் தமிழக வெற்றி கழகத்தின் ஒன்றிய மகளிர் அணி தலைவியாக இருந்தார்.‌ இவர் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தன்னையும் பெண்களையும் புறக்கணித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கம்பத்தில் இருந்து கொடியை அவர்கள் இறக்கியதோடு காரில் இருந்த கொடி போன்றவற்றையும் கழற்றி எடுத்தனர். அப்போது அங்கு வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஒருவர் மாவட்ட செயலாளர் ஏற்றிய கொடியை எப்படி இறக்கலாம் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் பிரியதர்ஷினி உட்பட பத்துக்கும் மேற்பட்ட மகளிர் நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகிய நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பிரியதர்ஷினி கூறியதாவது, நான் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன். நான் கஷ்டப்பட்டு அனைத்தையும் செய்த நிலையில் எனக்கு உரிய மரியாதை தரப்படவில்லை. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் கட்சி நிர்வாகிகள் அனைத்தையும் அவர்கள் தான் செய்தது போன்று காட்டிக் கொள்கிறார்கள். நான் செய்ததை அவர்கள் வெளியில் காட்டவில்லை மேலும் கட்சியில் பெண்களுக்கு மரியாதை இல்லை என்று கூறினார்.