
கடலூர் மாவட்டம் சொக்கநாதன் பேட்டை கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டில் பிறந்த 5 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை இருந்தது. இதுகுறித்து சைல்ட் லைன் அமைப்பிற்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சைல்ட் லைன் அமைப்பினர் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து விசாரித்தனர்.
அப்போது அந்த பெண் 1 லட்ச ரூபாய் பணம் கொடுத்து குழந்தையை வாங்கியது தெரியவந்தது. இதனால் மீட்பு குழுவினர் போலீசார் உதவியுடன் குழந்தையை வைத்து காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் வடலூரைச் சேர்ந்த சித்த மருத்துவரான சத்ய பிரியா(67) சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்வது, பிரசவம் பார்ப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வந்தது தெரியவந்தது.
தவறான உறவினால் கருத்தரித்து சிகிச்சைக்கு வந்த ஒரு பெண்ணின் குழந்தையை வாங்கி சத்யபிரியா 1 லட்ச ரூபாய் பணத்திற்காக அந்த பெண்ணுக்கு விற்பனை செய்துள்ளார். இதனால் சத்யபிரியாவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சத்ய பிரியாவுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.