தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் அருகே இருக்கும் கிராமத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் 17 வயதுடைய மூத்த மகனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. நேற்று அந்த சிறுவனின் தந்தை வேலைக்கு சென்று விட்டார். இரவில் சிறுவன் தூங்கி கொண்டிருந்த தனது தாய் மீது அம்மி கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தனது தந்தையை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அம்மாவின் தலையில் அம்மிக்கல்லை போட்டுவிட்டேன். ரத்தம் கொட்டுகிறது என கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் தந்தை வீட்டிற்கு வந்து பார்த்த போது மனைவி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடைப்பதை கண்டு கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சிறுவனை கைது செய்தனர். காவல் நிலையத்தில் வைத்து அந்த சிறுவன் தாயை நினைத்து தேம்பி தேம்பி அழுது கொண்டே இருந்துள்ளான். மேலும் எனது அம்மா எங்கே? நான் அவரிடம் போக வேண்டும் என அழுதபடி கேட்டுள்ளான். அந்த சிறுவனை திருநெல்வேலியில் இருக்கும் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.