
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், காவல்துறையினரை பார்த்து ரவுடிகள் பயந்து ஓடிய காலம் மாறி தற்போது தமிழ்நாடு ரவுடிகள் ராஜ்ஜியமாக மாறிக்கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் சட்ட விரோத சமூக செயல்களுக்கு திமுக துணை போவது தான். கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சி சமூக விரோதிகளின் ஆட்சி என்று கூறினால் அது மிகையாகாது. அந்த வகையில் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
இந்த கொலைக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த 3 வருடங்களாக திமுக ஆட்சியில் தீமைகள் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. நடமாட்டம் மிகுந்த சென்னையின் பிரதான இடத்தில் ஒருவரை வெட்டி சாய்க்கும் அளவுக்கு ரவுடிகளுக்கு தைரியம் வந்துவிட்டது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது ஒரு துளி கூட இல்லை என்பது இதற்கு உதாரணம். ஒருவரை கைது செய்வதும் தனிப்படை அமைத்து தேடுவது மட்டுமே வழக்கமாகிக் கொண்டிருக்கிறதே தவிர இந்த சட்ட ஒழுங்கு சீர்கேடை சரிசெய்ய திமுக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் தமிழ்நாட்டின் தலைநகரை கொலைநகராக மாற்றிக் கொண்டிருக்கும் திமுக அரசு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.