மகாராஷ்டிரா மாநிலம் பீட் நகரை சேர்ந்த கிருஷ்ணா ராம்தேவ் முண்டே என்ற மாணவர் பார்லி தாலுகாவில் உள்ள ரத்னேஸ்வர் பள்ளியில் படித்து வருகின்றார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி தோல்வியடைந்த நிலையில் பிறகு மனம் தளராமல் தொடர்ந்து தேர்வுகளை எழுதியுள்ளார். அதன்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் பத்து முறை தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவதற்கு முயற்சித்த நிலையில் 11 வது முறை தேர்வு எழுதிய இவர் தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.

இந்த நிலையில் மகாராஷ்டிரா பொது தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த முறை மாணவன் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்தச் செய்தியை அறிந்த பெற்றோர் மகிழ்ச்சியில் மேளதாளத்துடன் மகனை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அதனைப் பார்த்த ஊர் மக்களும் மாணவனை தோளில் தூக்கி சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.