
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்த நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய அரசியலில் பயணித்துக் கொண்டிருக்கிறார். இந்த கட்சியின் முதல் மாநாடு கடந்த வருடம் விக்கிரவாண்டியில் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து கட்சி தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. அதில் விஜய் மட்டுமல்ல மற்ற நிர்வாகிகளும் அனல் பறக்க பேசினர். அதில் தேர்தல் வியூக தொகுப்பாளராக பிரஷாந்த் கிஷோர் கலந்து கொண்டு பேசி இருந்தார். அவருடைய பேச்சுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் சீமானும் இது குறித்து பேசி உள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பு மறு சீராய்வு செய்து புது பொறுப்பாளர்களை தேர்வு செய்வதற்கான கூட்டம் நேற்று வாணியம்பாடியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாட்டின் அரசியல் ஊழல் குறித்து அனைவருக்கும் தெரிந்ததுதான். பிரசாந்த் கிஷோர் பீகாரில் இருந்து வந்து நம்முடைய மாநிலத்தில் ஊழல் உள்ளது என்று சொல்லத் தேவையில்லை. ஊழல் இருப்பது தெரிந்தும் எதற்கு இங்கு வந்து வேலை செய்ய வேண்டும்? ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் வெல்வதற்கு எதற்கு வியூகம் வகுக்க வேண்டும்? தமிழகத்தின் புதிய நம்பிக்கை விஜய் என்ற பிரசாந்த் கிஷோர் கூறுகிறார் என்றால் அதை பீகார் காரன் தான் வந்து சொல்ல வேண்டுமா? வாங்கும் காசுக்கு மேல் பிரசாந்த் கிஷோர் கூவுகின்றார் என்று சீமான் தெரிவித்துள்ளார்.