
தமிழகம் முழுவதும் திமுகவிற்கு ஆதரவான சூழல் நிலவுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் நலனுக்காக அனுதினமும் உழைத்து வரும் முதல்வரின் உழைப்புக்கும் திராவிட மாடல் அரசுக்கும், பெரியாரை இகழ்ந்து அரசியல் செய்ய நினைத்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் மக்கள் வெற்றி கொடுத்துள்ளனர்.
குரங்கு கையில் சிக்கிய பூமாலையாக தன் கைக்கு கிடைத்த கட்சியை சீரழித்து சின்னா பின்னம் ஆக்கி தோல்வி மேல் தோல்வி கண்ட தோல்வி சாமி இல்லாத பொய்களை வீசுவது அன்றாட வேலையாக வைத்திருக்கிறார். அதனால்தான் மக்களை சந்திக்க முடியாமலும் திமுகவை எதிர்க்க துணிச்சல் இல்லாமலும் ஓடி ஒளிந்து கொண்டனர். ஈரோடு இடைத்தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்லாமல் வாக்களிக்காத மக்களின் நலனுக்காகவும் இந்த அரசு பாடுபடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வரும் அப்படியே அறிவித்ததால் தான் இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வாக்குகள் அனைத்தும் திமுகவுக்கு வந்துள்ளது. அங்கு மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதுமே திமுகவிற்கு ஆதரவான சூழல்தான் நிலவிக் கொண்டிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் அலை தான் தமிழ்நாடு முழுவதும் தற்போது அடித்துக் கொண்டிருக்கிறது. இது 2026 ஆம் ஆண்டு தேர்தலில் எதிரொலிக்கும் என செந்தில் பாலாஜி பேசியுள்ளார்.