தமிழகத்தில் நேற்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொது தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

தமிழகத்தில் மொத்தமாக 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் மாணவிகள் 95.88 சதவீதமும், மாணவர்கள் 91.74 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் வழக்கமாக மாணவர்களை விட மாணவிகள் தான் இந்த வருடமும் தேர்ச்சி அதிகமாக பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியின் மகள் ஜியா தமிழக அரசு பள்ளியில் படித்து 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 467 மதிப்பெண்கள் பெற்று அசத்தினார். இவர் தமிழில் 93 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியலில்  99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தனது சக தோழிகள் மற்றும் ஆசிரியர்களுடன் பழகியதன் மூலம் தமிழை கற்றுக் கொண்டதாக ஜியா கூறினார். மேலும் அரசு பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவு இலவச சீருடை, காலனி, புத்தகங்கள் எல்லாமே நான் நன்றாக படிக்க காரணம் என ஜியா கூறியுள்ளார்.

ஜியாவை போலவே அவரது மூத்த சகோதரி ரியாகுமாரியும், தங்கை சுப்ரியா குமாரியும் அழகாக தமிழ் பேசுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் பேசி எழுதி வரும் ஜியா 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தமிழை தொடர்ந்து படிப்பேன் என கூறியுள்ளார்.