
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதோடு அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.
இங்கு அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும். அதன் பிறகு தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.