
தமிழகத்தில் நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அக்னி நட்சத்திரம் என்பதால் கத்திரி வெயிலின் தாக்கம் என்பது அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் தணிந்தது. அந்த வகையில் இன்றும் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் இன்று அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.