தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பாட நூல்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள், மிதிவண்டி மற்றும் கணித உபகரண பெட்டிகள் என அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறந்தவுடன் பாடநூல்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விடும். ஆனால் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் திறந்து சுமார் ஒன்றரை மாதம் ஆகிவிட்ட நிலையில் இதுவரை சீருடைகள் மற்றும் காலணி போன்ற பொருள்கள் எதுவும் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 4 செட் புதிய சீருடைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார். தனித்தனியாக அளவெடுத்து தைப்பதால் அவர்களுக்கு சீருடை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.