
மத்திய கல்வி அமைச்சகமானது 2024 ஆம் ஆண்டுக்கான இந்தியாவில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் போன்றவைகளின் பட்டியல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு பட்டியலில் இந்தியாவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து 6-வது முறையாக சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்துள்ளது. அதன் பிறகு இரண்டாம் இடத்தில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் பெங்களூரு இடம்பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து நாட்டில் உள்ள சிறந்த மாநில பல்கலைக்கழகங்களில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.
இதனையடுத்து நாட்டில் உள்ள சிறந்த மருத்துவக் கல்லூரிகள் பட்டியலில் முதலிடத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி இருக்கும் நிலையில் வேலூரில் உள்ள சிஎம்சி கல்லூரி 3-ம் இடத்தைப் பிடித்துள்ளது. அதன் பிறகு பல் மருத்துவக் கல்லூரி தரவரிசை பட்டியலில் சென்னையில் உள்ள சவிதா கல்லூரி முதலிடத்தில் இருக்கிறது. இதே போன்று நாட்டில் உள்ள கலை கல்லூரிகள் பட்டியலில் முதலிடத்தில் டெல்லி ஹிந்து கல்லூரி இருக்கிறது. இந்த பட்டியலில் கோயம்புத்தூரில் உள்ள கிருஷ்ணம்மாள் கல்லூரி 7-ம் இடத்திலும், சென்னை லயோலா கல்லூரி 8-ம் இடத்திலும் இருக்கிறது. மேலும் 2024 ஆம் ஆண்டில் சிறந்த கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பட்டியலில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகள் இடம்பெற்றுள்ளது மிகவும் சிறப்பானதாக அமைந்துள்ளது.