திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்த தனியார் காவலாளி அஜித் குமார், நகை திருட்டு சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் காவலில் மரணமடைந்த சம்பவம் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அஜித் உடலில் நடைபெற்ற பிரேத பரிசோதனை அறிக்கையின் shocking தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

பிரேத பரிசோதனையில், அஜித்தின் உடலில் மொத்தமாக 50 வெளிப்புற காயங்கள் காணப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதில், 12 சிராய்ப்பு காயங்கள், மீதமுள்ளவை ரத்தக்கட்டு மற்றும் சிதைவான தசை காயங்களாக இருந்துள்ளன. வயிற்றின் நடுப்பகுதியில் கூரிய பொருளால் குத்திய புண், மண்டையோட்டில் அடிபட்டதன் அடையாளங்கள், மேலும் மூளையில் ரத்தக்கசிவும் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அஜித் உடலில் சிகரெட் சூடு வைத்த காயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டதற்கான பல்வேறு அடித்தள ரத்தக்கட்டுகள் உள்ளதாகவும், தரையில் இழுத்துச் சென்றதன் அடையாளமாக சிராய்ப்பு காயங்களும் உள்ளன எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சித்ரவதை பல மணி நேரம் போலீசாரால் கூட்டமாக நடத்தப்பட்டிருக்கலாம் என பரிசோதனை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இது சம்பந்தமாக மாநிலம் முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டத்துறை, மனித உரிமை ஆணையம் மற்றும் அரசியல் தலைவர்கள் இந்த சம்பவத்தில் தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

முக்கியமாக, அஜித் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மக்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அஜித் மரணம் தமிழகத்தில் காவல் துறையின் செயல்முறைகளில் சீர்திருத்தம் அவசியம் என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது.