ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் உயிரிழப்புகள் என்பது தொடர்கதையாகியுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் பண இழப்பு குறித்து தொடர்ந்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் பொதுமக்கள் ஆன்லைன் விளையாடில்  ஈடுபட்டு பணத்தை இழக்கிறார்கள். பின்னர் இழப்பை ஈடுகட்ட முடியாமல் அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு போகிறார்கள். இந்த ஆன்லைன் விளையாட்களால் தமிழகத்தில் உயிரிழப்புகள் என்பது ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் ஆன்லைன் விளையாட்டுக்களால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் தீமையை விளக்கி பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி நடத்த வேண்டும் என்று தற்போது பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளில் முதலில் லாபத்தை தருவது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கிய பின்னர் பண இழப்பீடு ஏற்படுகிறது. இது தொடர்பாக மாணவர்கள் ஒரு விளக்கமான கட்டுரை எழுத வேண்டும். இதற்காக தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரை போட்டிகளை நடத்துமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் இந்த கட்டுரை போட்டியை நடத்துவது தொடர்பான அறிவிப்பு பறந்துள்ளது.