சேலம் மாவட்டம் வெள்ளாளபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் பிரான்சிஸ் ஆண்டனி என்ற 50 வயது நபர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நாகர்கோவிலை சேர்ந்தவர். இவர் வேலை நிமித்தமாக தாரமங்கலம் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில்இவர் வேலை பார்க்கும் பள்ளியில் 7 வயது மாணவி ஒருவர் இரண்டாம் வகுப்பு படிக்கிறார்.

இந்த மாணவிக்கு பிரான்சிஸ் ஆண்டனி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி தன் பெற்றோரிடம் கூறிய நிலையில் அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று குழந்தைகள் நல அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியில் வந்து விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. மேலும் அந்த புகாரின் படி பிரான்சிஸ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.