
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவி தொகை 1500 ரூபாய் வழங்கப்படுகிறது. பிற மாநிலங்களில் இருப்பதைப் போல தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளின் உதவி தொகையை உயர்த்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்தது. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் சொல்ல முடியாத வேதனையுடன் வாழ்கின்றனர்.
அவர்களது பிரச்சனைகளை யாரும் கவனிக்காத சூழலில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது தனித்துறையை ஏற்படுத்தி நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியது பாராட்டையும், வரவேற்பையும் பெற்றது. மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் உதவி தொகை உயர்த்தி வழங்கி கண்ணியமான வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என போராடி வருகின்றனர். பெரும்பாலானோர் ஏழை, எளிய அன்றாட கூலி தொழிலாளர்கள் குடும்பங்களை சேர்ந்தவர்கள். அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்த அண்டை மாநிலங்களான புதுச்சேரியில் 4800 ரூபாய், தெலுங்கானாவில் 4000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
ஆந்திராவில் சாதாரண ஊனமுற்றோருக்கு 6000 ரூபாய், கடும் ஊனமுற்றோருக்கு பத்தாயிரம் ரூபாய், வீட்டை விட்டு நடமாட இயலாத ஊனமுற்றோருக்கு 15 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகிறது. எனவே தமிழக அரசு சாதாரண ஊனமுற்றோருக்கு 6000 ரூபாய் உதவி தொகையும் கடும் ஊனமுற்றோருக்கு 10 ஆயிரம் ரூபாய் உதவி தொகையும் வழங்க வேண்டும். உதவித்தொகைக்கு விண்ணப்பித்து காத்திருப்போர் அனைவருக்கும் உடனடியாக உதவி தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முதலமைச்சர் என்ன முடிவு எடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.