தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் எனவும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2000 கோடி ரூபாயை தர சட்டத்தில் இடம் கிடையாது என்றும் சமீபத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். அவருடைய இந்த பேச்சுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இப்படியான நிலையில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பாக நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தொல் திருமாவளவன், மீண்டும் ஒரு மொழிப்போர் உருவாகும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்தார். அதற்கான அரக்கோணம் தான் இது.

தமிழகத்திற்கு பி எம் ஸ்ரீ பள்ளிகள் வந்தால் மாணவர்கள் மூன்று மொழிகள் கற்க வேண்டிய சூழல் உருவாகும். இந்த முன்மொழி திட்டத்தை மாணவர்கள் மீது திணிப்பதற்கு என்ன காரணம் என்றால் இந்திய முழுவதும் ஒரே மொழியை பேசுகின்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம். நீ எந்த தாய் மொழியை பேசினாலும் இந்தி தான் இந்தியாவின் தாய்மொழி அதை கட்டாயம் பேசியாக வேண்டும் என்கின்றனர். தமிழை அவர்கள் பிராந்திய மொழி என்று கூறுகிறார்கள். இந்தியை இந்தியாவின் மொழி என கூறுகிறார்கள். இது எவ்வளவு அபத்தம். இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் அனைவரும் வடக்கில் ஒரு சில மாநிலங்களில் தான் உள்ளன. ராஜஸ்தான் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் உள்ள தாய் மொழியை அவர்கள் சிதைத்து விட்டனர்.

அந்த மாநிலங்களில் தாய் மொழியை பேசுபவர்களை விட இந்தி மொழி பேசுபவர்கள் தான் அதிகம் உள்ளனர். இந்தி என்பது அடிப்படையில் ஒரு மொழியே கிடையாது. நாம் எல்லோரும் இந்தி பேசக்கூடியவர்களாக ஆகி இருந்தால் மோடி வித்தை இங்கேயும் எடுபட்டிருக்கும். தமிழகத்தில் அவர்கள் எளிதில் கால் ஊன்றி இருப்பார்கள். திராவிட இயக்கங்களும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளும் இருக்கும் வரை அவர்களுடைய ஜம்பம் இங்கு பலிக்காது. நீங்கள் என்ன முயற்சி செய்தாலும் தமிழகத்தில் உங்களால் காலூன்ற முடியாது வேரூன்ற முடியாது. உங்களுடைய வாலை ஒட்ட நறுக்குவோம் என்று சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த மண்ணில் உங்கள் அரசியல் ஒருபோதும் எடுபடாது என திருமாவளவன் பேசியுள்ளார்.