ராணிப்பேட்டை காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திலிருந்து சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் கெட்டது நன்றாக தெரிவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் நிலையத்திற்கு இன்று பாதுகாப்பு இல்லை என்ற அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. தமிழகத்தில் கொடூரமான குற்றங்கள் நடப்பது என்பது தற்போது வாடிக்கையாக்கிவிட்டது.

எந்த குற்றம் நடந்தாலும் அது தொடர்பாக யாரையாவது கைது செய்து கணக்கு காட்டுவதையும் அதையே அரசின் சாதனையாக காட்டிக் கொள்வதையும் தான் திராவிடம் மாடல் அரசு வழக்கமாக வைத்துள்ளது. இப்படியான நாடகங்கள் மூலமாக தமிழக மக்களை ஏமாற்றி விட முடியாது. குற்றங்கள் தொடர்பாக புலன் விசாரணை நடத்தியும் குற்றங்களை தடுப்பதும் வேறு வேறு.

குற்றங்களை தடுப்பது தான் காவல்துறையின் முதன்மையான பணி. காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசக்கூடிய தைரியம் குற்றவாளிகளுக்கு வருகிறது என்றால் தமிழக காவல்துறை மீதான அச்சம் போய்விட்டது என்று தானே எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழக காவல்துறை கடந்த நான்கு வருடங்களாக ஆளுங்கட்சியினரின்  கைப்பாவையாக மாறி உள்ளது. தமிழக மக்களை காப்பாற்ற தவறிவிட்டது தான் இத்தகைய செயல்கள் அரங்கேற காரணம். காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது விரைவில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி கோரிக்கை வைத்துள்ளார்.