
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகாலை வரை 29 பேர் உயிரிழந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பெண்கள் உட்பட மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக அமைச்சர்களுடன் முதல்வர் இன்று அவசர ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.
சட்டமன்றத்தின் இன்றைய அலுவல்கள் முடிந்ததும் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, டிஜிபி, உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். உயிரிழந்தோருக்கு நிவாரணம் வழங்குவது, பாதிக்கப்பட்டோருக்கு உயர் சிகிச்சை வழங்குவது உள்ளிட்டவை குறித்து இதில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.