
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். இந்நிலையில் பழனியில் இன்று அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. இந்த விழாவுக்கு அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமை தாங்குகிறார். இந்த விழாவின்போது தமிழ் கடவுள் முருகனின் வழிபாட்டு சிறப்பு, இலக்கிய சிறப்பு தொடர்பான கருத்தரங்கங்கள், முருகப்பெருமானின் புகழ் தொடர்பான ஆய்வு கட்டுரைகள், மாநாட்டு மலர்விழா நடைபெறுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களை கவரும் வகையில் அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் தமிழகம் மட்டும் இன்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாத பைகளும் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக சுமார் 60,000 பிரசாத பைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்வதால் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த விழாவினை காணொளி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கும் நிலையில் சுமார் 3 லட்சம் பேர் விழாவில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.