தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் நேற்று ஒப்புதல் அளித்த நிலையில் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக இன்று அரசிதழ் வெளியிட்டுள்ளது. அதில் இனி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்தால் ஒரு ஆண்டு சிறை அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம் அமலானதை தொடர்ந்து தடை செய்ய வேண்டிய கேம் பட்டியலை தயாரிக்கும் பணியில் சென்னை சைபர் கிரைம் போலீசார் இறங்கியுள்ளனர். சூதாட்ட தடை சட்டத்தின் படி தடை செய்யப்பட வேண்டிய ஆன்லைன் சூதாட்ட செயலிகள் மற்றும் இணையதளங்கள் உள்ளிட்டவைகளின் பட்டியலை போலீசார் தயார் செய்து வருகின்றனர். இது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து பின் கேம் பட்டியல் வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.