நீலகிரி மாவட்டத்தில் ஒரு 15 வயது சிறுமி தன்னுடைய தாய் மற்றும் சகோதரனுடன் வசித்து வருகிறார். இந்த சிறுமியின் தந்தை ஏற்கனவே இறந்து விட்டார். இந்த சிறுமி ஊட்டியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வருவதால் பொது தேர்வுக்கு நன்றாக படிக்க வேண்டும் என்று பலரும் கூறியதால் சிறிது மன உளைச்சலுக்கு ஆளானார். இதைத்தொடர்ந்து தன்னுடைய சித்தி வீட்டிற்கு சென்று சிறுமி தங்கினார். கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் தேதி சிறுமி சித்தி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவருடைய சித்தப்பா யாரும் இல்லாத நேரம் பார்த்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். அதோடு இது பற்றி வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று சிறுமியை அவர் மிரட்டியுள்ளார். இதனால் சிறுமி அதைப்பற்றி வெளியில் யாரிடமும் சொல்லாத நிலையில் கடந்த மாதம் 14ஆம் தேதி தன்னுடைய பாட்டி வீட்டில் நடந்த ஒரு திருவிழாவிற்காக சென்றுள்ளார்.

அப்போது ஏற்கனவே திருமணம் ஆன ஒரு 25 வயது வாலிபர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதேபோன்று பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒரு 85 வயது முதியவரும் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை பள்ளி தோழிகளிடம் கூறி கதறினார். உடனடியாக தோழிகள் டீச்சர் உதவியுடன் சைல்டு லைன் நம்பருக்கு போன் போட்டு நடந்த விவரங்களை கூறினர். இதைத்தொடர்ந்து போலீசில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து சிறுமியின் சித்தப்பா மற்றும் 25 வயது வாலிபரை கைது செய்தனர். சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர் தற்போது படுத்த படுக்கையாக இருப்பதால் அவரை கைது செய்யாமல் என்ன செய்வது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.