பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அஹ்மத் ஷரீப் சௌத்ரி, இந்தியாவை கடுமையாக எச்சரித்துள்ள செயல் சர்வதேச அளவில் அதிர்ச்சியை‌ ஏற்படுத்தியுள்ளது.

அதாவது இந்தியா, பாகிஸ்தான் பயங்கரவாதத்தை கைவிடும்வரை சிந்து நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. போர் முடிவுக்கு வந்தாலும் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்கும் வரை சிந்து நதிநீரை திறந்து விட முடியாது என இந்தியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள ஒரு பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஹ்மத் ஷரிப் சவுத்ரி, “நீங்களை நீரைத் தடுக்கிறீர்கள் என்றால், நாங்கள் உங்கள் மூச்சை நிறுத்தி விடுவோம் என்று கூறினார். அவர் இந்தியாவை பகிரங்கமாக எச்சரித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அதிர்ச்சி தரும் கருத்து, 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலின் முக்கிய திட்டுனர் ஹபீஸ் சயீது பயன்படுத்திய தீவிரவாதத்திற்கேற்ப ஒத்த வார்த்தையாகவே அமைந்துள்ளது. ஹபீஸ் சயீது, லஷ்கர்-எ-தொய்பா அமைப்பின் நிறுவனர் என்றும், இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான பயங்கரவாத வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக இருந்தவரும் ஆவார்.

அந்த வகையில், பாகிஸ்தான் ராணுவத்தின் அதிகாரபூர்வ வாயிலாக இத்தகைய வார்த்தைகள் வெளிவருவதே இந்தியா குற்றம்சாட்டும் “ராணுவம் – தீவிரவாத அமைப்புகள்” கூட்டணி குறித்து வலுவான சாட்சியாக பார்க்கப்படுகிறது.

இந்தியா எடுத்த சிந்து நதி நீர் ஒப்பந்த இடைநிறுத்த முடிவு, ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிந்தைய நடவடிக்கையாகும். அந்த தாக்குதலில் பல சுற்றுலா பயணிகள் உயிரிழந்திருந்தனர். இந்தியா, நீர் ஒப்பந்தம் போன்று மாறாத மதிப்புகள் கொண்ட ஒப்பந்தங்களையும் மீற வேண்டிய கட்டாய நிலைக்கு பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு கொண்டு சென்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.

 

மேலும் தற்போது பாகிஸ்தான் ராணுவத்திலிருந்து நேரடி மிரட்டல் வந்துள்ளதால், இரு நாடுகளுக்கிடையேயான நீர் ஒப்பந்தம் புதிய சிக்கல்களை உருவாக்கியுள்ளது என்று கூறப்படுகிறது.