
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் செந்தமிழ் நகரை சேர்ந்தவர்கள் குள்ளப்பா- ராதம்மா(46) தம்பதியினர். இவர்கள் கால்நடைகள் வளர்த்து பால் விற்பனை செய்து வந்தனர். இந்த தம்பதியினர் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் ஆஞ்சநேயர் கோயில் கட்டி வழிபட்டு வந்தனர்.
இந்த நிலையில் ஆஞ்சநேயர் கோயிலை சுற்றிப் பார்த்த கும்பல் ராதம்மாவிற்கு கடவுள் அனுக்கிரகம் உள்ளது எனவும், வீட்டின் அருகே புதையல் உள்ளதாகவும் கூறினர். அதனால் வீட்டின் அருகே சிறு பூஜை நடத்தி ஒரு சிறிய பானையில் இருந்து இரண்டு தங்க காசுகள் எடுத்து ராதம்மாவிடம் கொடுத்துள்ளனர்.
அந்த தங்க காசுகளை சோதனை செய்தபோது உண்மையான தங்கம் என தெரியவந்தது. அதனால் பூமிக்கு அடியில் புதையல் உள்ளது என நம்பி ராதம்மா பூஜை செலவிற்காக 4 லட்சம் மற்றும் இதர செலவுக்காக 4 லட்சம் என மொத்தமாக 8 லட்சத்தை அந்த கும்பலிடம் கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த 23-ம் தேதி ராதாம்மா வீட்டின் அருகே பூஜை செய்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த பானையை எடுத்து ராதாம்மாவிடம் கொடுத்தனர். மேலும் இதற்கு தினமும் பூஜை செய்து வர வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
மேலும் பூஜை முடியும் வரை பானையை திறந்து பார்க்க கூடாது எனவும், மீறி திறந்தால் ரத்த வாந்தி எடுத்து இறந்து விடுவீர்கள் எனவும் பயமுறுத்தினர். புதையல் இருப்பது தெரிந்தால் அரசு அதிகாரிகள் எடுத்து சென்று வருவார்கள் எனவே இதனைபற்றி யாரிடமும் கூற வேண்டாம் என கூறினர்.
பின்பு இந்த புதையலை வாங்குவதற்காக ஒருவர் 2.50 கோடி அட்வான்ஸ் பணம் கொடுத்ததாக கூறி ஒரு பணப்பெட்டியை ராதாம்மாவிடம் கொடுத்துள்ளனர். இறுதியாக பூஜையை முடித்து விட்டு புதையல் உள்ள பானையையும், பணப்பெட்டையும் ஒன்றாக திறக்க வேண்டும் என கூறினர்.
சில நாட்களுக்குப் பிறகு எங்களுக்கு பணம் தேவை என அந்த கும்பல் ராதாம்மாவிடம் கேட்டுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த ராதாம்மாவின் மகன் புதையல் இருக்கும் பெட்டி மற்றும் பணப்பெட்டியை திறந்து பார்த்த போது உள்ளே ஒன்றும் இல்லை. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ராதாம்மா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த கும்பல் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
அதன் அடிப்படையில் திருப்பூரை சேர்ந்த சசிகுமார்(62),சங்கர் கணேஷ்(43), செல்வராஜ்(61), பழனியை சேர்ந்த பிரபாகர்(37), சசிகுமார்(48), சேலத்தை சேர்ந்த ராஜ்குமார்(45), நடராஜன்(48), முத்துக்குமரவேல்(48), பிரகாஷ் குப்தா(68), லட்சுமி காந்த் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்தவர்களிடம் விசாரணை நடத்திய போது இவர்களுடன் சேர்ந்து மூன்று பெண்களும் மோசடியில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரிய வந்தது. எனவே தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.