சென்னை திருவொற்றியூர் எர்ணாவூர் பகுதியில் சேர்ந்தவர் வீரமணி. மின்வாரிய ஊழியரான இவர் நேற்று முன்தினம் ஏற்பட்ட மின்தடையை சரி செய்ய சிவகாமி நகரை சேர்ந்த முருகேசன் உட்பட உடன் பணிபுரியும் நான்கு ஊழியர்களுடன் பணிக்கு சென்றுள்ளார். வீரமணியும் முருகேசனும் ட்ரான்ஸ்பார்மர் ஒன்றில் ஏறி பழுதை சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது இருவர் மீதும் திடீரென மின்சாரம் பாய்ந்து வீரமணி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதில் பலத்த காயமடைந்த முருகேசனை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மின் தடைக்காக பழுது நீக்கி கொண்டிருந்தபோது ட்ரான்ஸ்பார்மரில் எப்படி மின்சாரம் பாய்ந்தது என்ற கேள்வியை முன்வைத்து இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வீரமணியின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பலர் அதிமுக கவுன்சிலர் கார்த்திக் தலைமையில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களிடம் மின்வாரிய உதவி இயக்குனர் உதயசூரியன் மற்றும் திருவொற்றியூர் போலீசார் பேச்சுவார்த்தை மேற்கொண்டு மறியல் போராட்டத்தை கைவிடச் செய்தனர்.