தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டையை சேர்ந்தவர் கவிதா. இவர் சித்தார்த்தனஅள்ளி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவ குழுவினரின் பரிந்துரையின் படி கவிதா விருப்ப ஓய்வு பெற்றார்.

இதனையடுத்து தனது சேர வேண்டிய பணிக்கொடை மற்றும் வருங்கால வைப்பு நிதி 29 லட்சத்து 22 ஆயிரத்து 384 ரூபாய் பெறுவதற்கு தர்மபுரி மாவட்ட கருவுலகத்துறையில் கவிதா விண்ணப்பித்துள்ளார்.

அப்போது அந்த தொகையை வழங்குவதற்கு முதன்மை அக்கவுண்ட் ஜெனரல் அலுவலகம் உத்தரவிட்ட பிறகும் பாலக்கோடு சார்நிலை கருவூலத்தில் அனுமதி அளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் கூடுதல் சார்புநிலை கருவூல அலுவலராக வேலை பார்க்கும் ராமச்சந்திரன்(42) என்பவரை கவிதாவின் மகன் அவினாஷ் சந்தித்து பேசினார். அப்போது பண பலன்கள் கிடைக்க உரிய அனுமதி வழங்க 10 ஆயிரம் ரூபாய் லட்சம் கேட்டதாக தெரிகிறது.

இது குறித்து அவினாஷ் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அவினாஷ் ராமச்சந்திரனிடம் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ராமச்சந்திரனை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.