ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த பிரபல டிக்டாக் பிரபலம் ஜபரி ஜான்சன் (25), “பாபா ஸ்கெங்” என்ற பெயரில் சமூக ஊடகங்களில் பிரபலமானவர். ஏப்ரல் 28 அன்று மாலை 6.30 மணியளவில் செயிண்ட் ஆண்ட்ரூ பகுதியில் உள்ள ரெட் ஹில்ஸ் சாலையில், தனது நண்பருடன் நேரடி ஒளிபரப்பில் ஈடுபட்டிருந்தபோது முகமூடி அணிந்த ஒருவர் திடீரென அவரின் பின்னால் நின்று  பலமுறை துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த தாக்குதலில், ஜபரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. தாக்குதல் நடத்தியவர் கையில் துப்பாக்கியுடன் இருந்ததாகக் கூறப்படுவதுடன், சம்பவ இடத்திலிருந்து தப்பியதாக கூறப்படுகிறது. போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதுடன், அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக இன்னும் எந்த சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை.

 

ஜபரி ஜான்சன், புகழ்பெற்ற ரெக்கே இசைக் கலைஞர் ஜா மேசனின் மகனாவர். சமூக ஊடகங்களில் அவரது கொலை சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் ஜமைக்காவில் மூன்று டிக்டாக் பிரபலர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது கவலைக்கிடமான தகவலாகும். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.