புதுக்கோட்டை மாவட்டம் வீசலூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் அரசு பேருந்தில் நடத்துனராக வேலை பார்த்த வந்துள்ளார். நேற்று கருப்பையா மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் அரசு பேருந்தில் பணியில் இருந்தார். அவர் பின்பக்க கதவு அருகே இருக்கும் கம்பி மீது நின்று கொண்டு பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் யானைமலை ஒத்தக்கடை அடுத்த தனியார் வங்கி அருகே வளைவில் பேரிகார்டு இருப்பதை பார்த்த ஓட்டுநர் ராஜா திடீரென பிரேக் பிடித்தார். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்த கருப்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கருப்பையாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.