திருவாரூரில் விளமல் கடை தெரு பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த டாஸ்மாக் கடையினால் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதனால் அதனை அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு எனும் பெயரில் பல்வேறு கட்சிகளின் சார்பாக மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீயிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில்  கூறப்பட்டுள்ளதாவது, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்கு அப்பால் டாஸ்மாக் மதுபான கடைகளை அமைக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அப்படி அமைக்கப்படும் மது கடைகளுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கடைகளை அகற்றி விட வேண்டும் என தமிழக அரசும் கூறியுள்ளது. ஆனால் இந்த இரண்டு டாஸ்மாக் கடைகளுமே விளமல் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 150 மீட்டர் தூரத்திற்கு உள்ளேயே இயங்கி வருகிறது.

இந்த மதுக்கடைகள் உள்ள பகுதி பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் பேருந்து ஏறும் பகுதியாக இருக்கிறது. மேலும் மன்னார்குடி, கும்பகோணம், திருவாரூர், தஞ்சை சாலைகளை இணைக்கும் மையப்பகுதியாக இது விளங்குகிறது. போக்குவரத்து நெருக்கடியான இந்த இடத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்குவது சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதனால் இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.