
தமிழகத்தில் காலி மது பாட்டில்களை திரும்ப பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதாவது டாஸ்மாக் கடைகளில் மது வாங்கி குடித்த பிறகு காலி பாட்டில்களை அப்படியே வாங்கி வீசுவதால் அதனால் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனால்தான் உயர் நீதிமன்றம் இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்தது. இந்நிலையில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறுவது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நவம்பர் மாதம் முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் அமல்படுத்தப்படும் என்றார். அதன் பிறகு காலி மது பாட்டில்களை திரும்ப பெறுவதற்கான டெண்டரை இதுவரை அரசு வெளியிடவில்லை எனவும், டாஸ்மாக் கடை ஊழியர்களின் பணிசுமை தொடர்பாக ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் அந்த குழுவின் அறிக்கையின்படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.