கேரள மாநிலம் தாமரைசேரி பகுதியில் ஒரு டியூஷன் சென்ட்ரில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. அப்போது குறிப்பிட்ட பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நடனமாடிய போது திடீரென பாட்டு நின்றது. அதை வேறொரு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கேலி செய்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது மாணவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளி ஆட்கள் சிலரை வரவழைத்து ஒரு தரப்பினர் எதிர் தரப்பை சேர்ந்த மாணவர்களை தேடி கண்டுபிடித்து தாக்கியதாக தெரிகிறது. இதனால் 10-ஆம் வகுப்பு படிக்கும் முகமது ஷஹபாஸ் என்ற மாணவர் படுகாயம் அடைந்தார். அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி முகமது பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஐந்து பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை சிறுவர் நல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.