உத்தரபிரதேசம் மாநிலத்தின் மஹோபா மாவட்டம் பன்வாடி தொகுதிக்குட்பட்ட கட்டேரா கிராமத்தில், 52 வயதான ஹர்கோவிந்த் என்பவரை பாம்பு கடித்தது. வீட்டில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் தூங்கிக்கொண்டிருந்த ஹர்கோவிந்தை, ஒரு அடி நீளமுள்ள பாம்பு கடித்துள்ளது. கடித்தவுடன் ஹர்கோவிந்த் வேதனையில் அலறியுள்ளார். அப்போது அருகிலிருந்த குச்சியை எடுத்து, பாம்பை அடித்து அதை அந்த இடத்திலேயே கொன்றுள்ளார். அவரது மனைவி ராம்தகேலி ஓடிவந்து, அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து முதலில் கிராமத்திலேயே பாரம்பரிய மருத்துவ முறையில் சிகிச்சை அளித்துள்ளனர்.

கடித்த இடத்தில் கட்டு போட்டு, நாட்டு மருந்துகள், இலைகள் பயன்படுத்தப்பட்டன. ஒரு கருடனை (பருந்தை) அழைத்து வந்தும் சிகிச்சை வழங்கப்பட்டதாம். ஆனால், ஹர்கோவிந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து, அவரது மனைவி தன் கணவருடன் இறந்த பாம்பையும் தூக்கிக்கொண்டு மாவட்ட மருத்துவமனைக்கு நேரில் சென்று சென்றார். “டாக்டர் சாஹேப், இந்த பாம்புதான் என் கணவரை கடிச்சது. சிகிச்சை கொடுங்க” என்று கூறிய ராம்தகேலியைப் பார்த்த மருத்துவர் வருண் திகைத்ததோடு, உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் ஹர்கோவிந்தை அனுமதித்தார்.

மருத்துவர்களின் அவசர செயல்பாட்டால் ஹர்கோவிந்தின் உயிர் காக்கப்பட்டது. தற்போது அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும், மேலும் சில நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்படுவார் எனவும் மருத்துவர் வருண் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மருத்துவமனைக்குள்ளும், சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஒரு பெண் தனது கணவரை காப்பாற்றுவதற்காக பாம்பையே மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் அளவுக்கு எடுத்துக் கொண்ட பாசம், வாழ்க்கையின் உண்மையான துணை என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது. மேலும் ஹர்கோவிந்தின் உயிரைக் காக்க அவரது மனைவியின் செயல்திறன் மிகப்பெரிய காரணமாக அமைந்துள்ளது. இதை மருத்துவர்கள் தங்களின் அனுபவத்தில் மறக்க முடியாத சம்பவமாக தெரிவித்துள்ளனர்.