
யுபிஐ (UPI) மூலம் PhonePe, Google Pay, Paytm போன்ற செயலிகள் வழியாக பண பரிமாற்றம் செய்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. பல நேரங்களில், நாம் அவசரத்தில் அல்லது கவனக்குறைவால் தவறான நபர்களுக்கு பணம் அனுப்பிவிடும் நிலை உருவாகும்.
இதுபோன்ற தவறுகளை தவிர்க்கும் நோக்கில், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI), வருகிற ஜூன் 30 முதல் புதிய விதிமுறையை அமல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த புதிய நடைமுறையின் கீழ், நீங்கள் யாரேனும் ஒருவருக்கோ அல்லது வணிகக் கணக்குக்கோ பணம் அனுப்பும் போது, உங்கள் போனில் அந்த எண்ணுக்கு சேமித்திருக்கும் பெயருக்கு பதிலாக, அந்த நபரின் வங்கிக் கணக்கில் பதிவு செய்யப்பட்ட உண்மையான பெயர் திரையில் காட்டப்படும்.
இது, பயனர்களுக்கு பணம் அனுப்பும் முன் குறைந்தபட்சம் ஒரு முறை உறுதிப்படுத்தும் வாய்ப்பை அளிக்கிறது. தற்போதைய நடைமுறையில், அந்நபரின் உண்மையான பெயரை அறிய வாய்ப்பு இல்லாததால், தவறான பரிவர்த்தனைகள் நடைபெறும் அபாயம் உள்ளது.
புதிய வசதியின் மூலம், உண்மையான பயனாளி யார் என்பதை சரியாகக் கண்டறிந்து பணம் அனுப்புவது எளிதாகும். இதனால், தவறான நபர்களுக்கு பணம் அனுப்பும் நிகழ்வுகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பும், நம்பகத்தன்மையும் இன்னும் உயர்வு பெறும். இந்த மாற்றம், டிஜிட்டல் இந்தியா முயற்சியில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. NPCI இன் இந்த நடவடிக்கை பயனர்களிடையே வரவேற்கப்படும் மாற்றமாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.