
ஜீன்ஸ் பேண்ட் அணிவதைக் காரணமாகக் கொண்டு ஏற்பட்ட சண்டையில், 19 வயது இளைஞர் ஒருவன் தனது மூத்த சகோதரனால் கொல்லப்பட்ட அதிர்ச்சிக்குரிய சம்பவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு போபாலில் நிகழ்ந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு, தப்பி ஓட முயன்ற 22 வயதான குற்றவாளி ஓம்கார் கிரி, போபால் ரயில் நிலையம் அருகே போலீசால் கைது செய்யப்பட்டார்.
அதாவது விவேக் கிரி என்பவர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வீடு திரும்பியதும், அவரது மூத்த சகோதரனான ஓம்காருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் திருமண நிகழ்ச்சிகளில் தற்காலிக பணியாளர்களாக வேலை செய்துவந்த நிலையில், 55 வயதான தந்தை முன்னா கிரியுடன் வசித்து வந்தனர். வீட்டில் சகோதரர்கள் இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவதாக ஏற்கனவே காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணியளவில் சகோதரர்களுக்குள் பெரும் சண்டை ஏற்பட்டது. அப்போது சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து, ஓம்கார் தனது தம்பி விவேக்கின் தொண்டையில் கத்தியால் குத்தினார். இதில் விவேக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலைக்கு பின், யாருக்கும் தெரியாமல் நகரத்தை விட்டு தப்பிச் செல்ல முயன்ற ஓம்காரை ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் கைது செய்து, கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர்.
போலீசார் விசாரணையின் போது, “விவேக் அடிக்கடி எனது உடைகளை அனுமதியின்றி அணிவார். எச்சரித்தபோதும் கேட்கவில்லை, அதனால் சண்டை ஏற்பட்டது,” என ஓம்கார் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து தந்தை முறையாக தகவல் அளிக்கவில்லை என்பதால், அவரின் நிலை குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.