மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று புதன்கிழமை மாலை ஏரோட்ரோம் பகுதியில் நடைபெற்றுள்ளது. அதாவது ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியின் மகனான தினேஷ் மிஸ்ரா (வயது 40), தனது மனைவிக்கு ஒரு ஜிம் பயிற்சியாளருடன் திருமணத்திற்குப் புறம்பான உறவு இருப்பதை அறிந்த பின்னர், மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அதிர்ஷ்டவசமாக, அவருக்கு உடனடி மருத்துவ உதவி அளிக்கப்பட்டு  அவரது உயிர் காப்பாற்றப்பட்டது.

தினேஷ் தற்கொலைக்கு முன் ஒரு உணர்ச்சிபூர்வமான வீடியோவும், 4 பக்க தற்கொலைக் குறிப்பும் பதிவு செய்துள்ளார். இதில், தனது மனைவியையும், முகமது மக்சூத் கான் என்ற ஜிம் பயிற்சியாளரும் கள்ளத்தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டியுள்ளார். தன் மனைவி  ஜிம்மில் சேர்ந்த பிறகு காணுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்ததாக கூறிய அவர், இரவு நேரங்களில் வீடியோ அழைப்புகள், பண பரிமாற்றம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும், கான் தனது மதத்தை மறைத்து நெருக்கத்தை வளர்த்ததாகவும், இது ‘லவ் ஜிஹாத்’ எனவும் கூறியுள்ளார்.

தனது மனைவி ஜிம்மில் சேர்ந்த பிறகு, இரவு நேரங்களில் தாமதமாக வெளியே செல்வதும், கானுடன் வீடியோ அழைப்பில் பேசுவதற்காக தன்னை அறையை விட்டு வெளியேறும்படி கூறியதும் வீடியோ ஆதாரங்களுடன் உள்ளதாக தினேஷ் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே காவல்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ‌ அவரது தற்கொலை முயற்சிக்கு பிறகு தற்போது, ஏரோட்ரோம் காவல்துறை விசாரணையை தொடங்கி, வீடியோவும், தற்கொலைக் குறிப்பும் ஆதாரமாக சேகரிக்கப்பட்டுள்ளன.  மேலும் இது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.